Total Pageviews

Sunday, 8 September 2013

:காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா ஊழல்

சண்டிகர்:காங்., தலைவர் சோனியாவின் மருமகன்,  மாபெரும் நில பேர மோசடியில் ஈடுபட்டது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்த மெகா ஊழலை, அரியானா மாநில, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா அம்பலப் படுத்தியுள்ளார். அரியானாவில், பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, குர்கான் அருகேயுள்ள, சிகோபூர் கிராமத்தில், நிலம் வாங்கியதில், காங்., தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, முறைகேட்டில் ஈடுபட்டதாக, "ஏழை மக்கள் கட்சி' தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், சில மாதங்களுக்கு முன், பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.

குழு அமைப்பு : இந்த முறைகேட்டுக்கு முட்டுக்கட்டையாக இருந்த, அரியானா மாநில, பத்திரப் பதிவு மற்றும் நில ஆவணத் துறை அதிகாரி, அசோக் கெம்கா, பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், அவர் புகார் கூறினார். பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கியதால், இதுகுறித்து விசாரிப்பதற்காக, மூன்று பேர் அடங்கிய குழுவை, அரியானா மாநில அரசு அமைத்தது. இந்த குழு, அக்டோபரில், மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், "ராபர்ட் வாத்ரா, எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. விதிமுறைகளின்படி தான், அவர், நிலத்தை வாங்கியுள்ளார்' என்று, நற்சான்று அளித்திருந்தது. இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி கெம்கா, ராபர்ட் வாத்ராவின் நில முறைகேடு குறித்து, விரிவாக விசாரித்து, 100 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை, அரியானா மாநில அரசிடம் அளித்துள்ளார். இதில், சோனியாவின் மருமகன் முறைகேட்டில் ஈடுபட்டதாக, அவர் கூறியுள்ளார்.

போலி ஆவணங்கள்:அவர் அளித்துள்ள அறிக்கை:அரியானாவில், 2004லிருந்து, காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. 2008ல், குர்கான் அருகேயுள்ள, ஷிகோபூர் கிராமத்தில், 3.5 ஏக்கர் நிலத்தை, "ஓங்காரேஷ்வர் பிராப்பர்ட்டி' என்ற நிறுவனத்திடமிருந்து, ராபர்ட் வாத்ராவின், "ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி' என்ற நிறுவனம் வாங்கியது. பின், இந்த இடத்திற்கு நகர திட்டமிடல் துறை, ஒப்புதல் வழங்கியது. ஓங்காரேஷ்வர் பிராப்பர்ட்டியிடம் இருந்து, நிலத்தை வாங்குவதற்கு, ராபர்ட் வாத்ரா நிறுவனம், பணம் எதுவும் கொடுக்கவில்லை. பணம் கொடுத்தது போன்ற, போலியான ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. காங்., தலைவர் சோனியாவின் மருமகன் என்பதற்காக, அரியானா மாநில அரசு, விதிமுறைகளை புறக்கணித்து,
நிலத்தை கைமாற்றுவதற்கு, அனுமதி வழங்கியுள்ளது.

மோசடி:
ராபர்ட் வாத்ராவின் நிறுவனத்துக்கும், ஓங்காரேஷ்வர் நிறுவனத்துக்கும் இடையேயான, ஒப்பந்தமே, மோசடியானது. இதன் பின், 2012ல், இந்த நிலம், வாத்ரா நிறுவனத்திடமிருந்து, டி.எல்.எப்., ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு கைமாறியுள்ளது.டி.எல்.எப்., நிறுவனம், இந்த நிலத்துக்காக, 58 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இது தொடர்பாக, இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்துக்கு, அரியானா மாநில நகர திட்டமிடல் துறை, அனுமதி அளித்துள்ளது. இந்த பரிமாற்றம் சுமுகமாக நடைபெறுவதற்காக, அரியானா மாநில அரசே, சட்ட விரோதமாக சில சலுகைகளை அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், அங்கீகாரம் பெறாத அதிகாரி, கையெழுத்திட்டுள்ளார்.

ரூ.1 கோடி பேரம்:அரியானாவில், பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான அரசு, 2005 முதல், 2012 வரை, ஆட்சியில் இருந்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில், 21 ஆயிரத்து, 366 ஏக்கர் நிலத்தில், வீடுகள் கட்டுவதற்கான உரிமங்களை, அம்மாநில நகர திட்டமிடல் துறை, அனுமதி வழங்கியுள்ளது. வீடுகள் கட்டுவதற்கான, உரிமங்கள் பெற்றுத் தர, ஏக்கர் ஒன்றுக்கு, 1 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு, லஞ்சம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், எட்டு ஆண்டுகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை, பேரம் நடந்திருக்கலாம்.ஆனால், இது போன்ற உரிமங்கள் பலவற்றை பெற்றுத் தந்த, ராபர்ட் வாத்ராவின் நிறுவனம், ஏக்கர் ஒன்றுக்கு, 15.78 கோடி ரூபாய் வரை விலை பெற்றுள்ளது. இதன் மூலம், 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.

வருவாய் இழப்பு:ராபர்ட் வாத்ராவின் முறைகேடுகளுக்கு, அரியானா மாநில காங்., அரசும், இதற்கு உடந்தையாக இருந்துள்ளது. இந்த சட்ட விரோத செயல் காரணமாக, அரியானா அரசுக்கு, பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில், கெம்கா தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர், மீனாட்சி லெக்கி கூறுகையில், ""முறைகேட்டில் ஈடுபடுவோருக்கெல்லாம், காங்கிரஸ் கட்சி, நற்சான்றிதழ்களை அளித்து வருகிறது. இதற்காக, அவர்கள்,ஒரு தொழிற்சாலையே துவங்கலாம்,'' என்றார்.பா.ஜ., சதி: காங்., ஆவேசம் : காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், மீம் அப்சல் கூறியதாவது:இந்த புகாரின் பின்னணியில், பா.ஜ.,வின் சதித் திட்டம் உள்ளது. பா.ஜ.,வினர் தான், அசோக் கெம்காவை தூண்டி விட்டு, இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வைக்கின்றனர். நில முறைகேடு குறித்து விசாரித்து, மூன்று பேர் அடங்கிய குழு தாக்கல் செய்த அறிக்கைக்கு தான், கெம்கா பதில் அளித்துள்ளாரே தவிர, அவர், அறிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை.இவ்வாறு, மீம் அப்சல் கூறினார்.அரியானா முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, பூபிந்தர் சிங் ஹூடா கூறுகையில், ""அரியானா மாநில அரசு, நில ஒப்பந்தம் குறித்த விஷயத்தில், யாருக்கும் சாதகமாகச் செயல்படவில்லை. இந்த விவகாரம் குறித்து, தலைமைச் செயலர் விசாரித்து வருகிறார்,'' என்றார்.

No comments:

Post a Comment