தமிழ்
தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்த்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது.
சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களானசி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்களை எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுத்தடக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியம் என்பது எந்தெந்த நூல்கள்?
கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தையே தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் என்று குறிப்பிடுகிறார்கள். தொன்மையான தமிழ் மொழிகளின் மிக மூத்த நூல் அகத்தியர் எழுதிய அகத்தியம் என்று கூறப்படுகிறது. அது இப்போது கிடைக்கவில்லை. அகத்தியம் ஓர் இலக்கண நூல்.இலக்கியம் தோன்றிய பிறகே அதனை ஒழுங்குபடுத்த இலக்கணம் தோன்றி இருக்கமுடியும் என்பதால், அகத்தியத்திற்கு முன்னரே தமிழில் சிறப்பான இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும். இப்போது நமக்குக் கிடைத்திருக்கிற மூத்த தமிழ் நூல் தொல்காப்பியமே. இதுவும் இலக்கண நுல்தான். [ கி.மு.300 - கி.பி 100. இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்க முற்பட்டனர் தமிழ் அறிஞர்கள். அப்போது தோன்றியவையே சங்கம் இலக்கியம் என்று வழங்கப்படுகிறது.அதோடு இக்காலக் கட்டம் கடைச் சங்ககாலம் எனப்படுகிறது] சங்க இலக்கியத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. பத்துப் பாட்டு.
2. எட்டு தொகை. 3. பதினெண் கீழ்க்கணக்கு. இவற்றில் பத்துப்பாட்டு ஒரு தனிப்பட்ட நூல் அல்ல. பல நூல்களின் தொகுப்பு. மொத்தம் எட்டுப் புலவர்கள் எழுதிய பாடல்கள் பத்தைத் தொகுத்து பத்துப்பாட்டு என்று கூறினர்.
இவற்றில் ஒவ்வொரு பாட்டும், தனி நூல் என்று சொல்லத்தக்க அளவில் முழுமையானவை.
இந்தப் பாட்கள் ஒவ்வொன்றும் 100 அடிகளுக்கு மேலானவை. 500 அடிகள் வரை கூட சில போகும்,
சில பத்துப்பாடல்கள் முருகு, பொருநாறு, பான் இரண்டு, முல்லை, பெருகு, வளமதுரைக் காஞ்சி,
மருவினிய கோலநெடுநல் வாடை, கோல் குறிஞ்சி, பட்டினப் பாலை, கடாத்தொடும் பத்து அதாவது,
1. திருமுருகாற்றுப்படை,
2. பெரும்பாணாற்றுப் படை,
3. சிறுபாணாற்றுப் படை,
4. பொருநாற்றுப்படை,
5. முல்லைப்பாட்டு,
6. மதுரைக் காஞ்சி,
7.நெடுநல்வாடை,
8. குறிஞ்சிப்பாட்டு,
9. பட்டினப்பாலை,
10. மலைபடுகடாம் ஆகிய 10 நூட்கள் 10 பாட்டு.
எட்டுத் தொகை எட்டுத் தொகை நூற்களும், பல புலவர்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பே, ஆனால், இவற்றுள் எந்தப் பாடலையும் ஒரு தனி நூலாகக் குறிப்பிடமுடியாது. 100 அடிகளுக்குக் கீழ்ப்பட்ட இந்த எட்டுத் தொகை நூலக்ளை ஒரு பழம்பாடல் இப்படி விவரிக்கிறது. 1. நற்றிணை
2. நல்ல குறுந்தொகை
3. ஐங்குறு நூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7.அகநானூறு
8.புறநானூறு
ஆகியவை இந்த 8 நூல்கள் ஆகும்.
பதினெண் கீழ்க்கணக்கு கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் என்போர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பாண்டியர்களை வென்று மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்.
இவர்கள் காலத்தில்தான் முச்சங்கத்தின் கடைசியான கடைச்சங்கம் அழிந்தது. தமிழர்களின்
கலை, கலாச்சாரம், நாகரிகம் நசிய தலைப்பட்டது. தமிழகத்தின் இருண்ட காலம் என்பார்கள்.
இதனை 'சங்கம் மருவிய காலம்' என்பார்கள்.அப்போது தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்க் கணக்கு என்று அழைக்கப்படுகிறது. ஐந்தோ அல்லது அதற்கு கீழோ அடிகளைக் கொண்டு அமையப் பெற்றவை கீழ்க்கணக்கு நூல். அதற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூலகள்.(பத்துப்பாடல், எட்டுத்தொகை) அறம்,பொருள், இன்பம் ஆகிய மூன்றையோ அல்லது மூன்றில் ஒன்றையோ விளக்கி வெண்பாவில் எழுதப்படுவது கீழ்க் கணக்கு நூல்கள். நாலடி, நான்மணி,நாநாற்பது ஐந்திணை, முப்பால்,கடுகம், கோவை. பழமொழி - மாமூலம் இன்னிலை சொல் காஞ்சியோடு ஏலாதி என்பதும் கைநீலையுமாம் கீழ்க்கணக்கு. (பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைச் சொல்வது உண்டு. அது பற்றிய குறிப்பைக் காணவில்லை.ஒருவேளை முப்பால் எனச் சொல்லப் பட்டிருப்பதால் இருக்கலாம்?) நாலடியா, நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனிவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி முதுமொழிக் காஞ்சி, முப்பால், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம் ஆகிய 11 அற ஒழுக்க நூல்களும், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகிய 7 அகத்துறை (காதல்) நூல்களும் சேர்த்து 18 நூல்கள் பதினென் கீழ்க் கணக்கு நூல்களாக வருகின்றன. இவையே சங்க கால நூற்கள். இவை மட்டும்தான் சங்க கால நூற்கள் என்பதல்ல. இவை மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. பல விடுபட்டுப் போய் இருக்கலாம். காலமும் கரையானும் கடற்கோளும் பிறவும் அழித்தது போக
எஞ்சியவைதான் இந்த சங்க இலக்கியங்கள். ஏட்டு சுவடிகளாகப் பலவீட்டுப் பரணிகளில் கிடந்த இந்த சங்க
இலக்கியகளை தேடி கண்ட்பிடித்து அச்சேற்றிவர்கள் அறிஞர் உ.வே.சா, பின்னத்தூர் அ.நாராயணசாமி,
சி.வை, தாமோதரம் போன்றோர்கள் ஆவார். தமிழ் கூறு நல்லுகமும் தமிழ் இலக்கிய வரலாறும்
அவர்களுக்கு எந்நாளும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.
அகநானூறு அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.
அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர். இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை. |
Total Pageviews
Monday, 10 June 2013
தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment