கேரளத்தின் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை மிகப்பெரிய மக்கள் போராட்டமாக வெடித்தது. இப்போது கர்நாடகத்துடன் காவேரி நீருக்காக தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. காவேரி ஆற்று நீரை தமிழகத்திற்கு தருவதில் கர்நாடகம் தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது. சர்வதேச விதிகளின்படி, ஒரு நதி உற்பத்தியாகி அது இறுதியாக சென்று சேரும் இடம் வரை குறுக்கே எந்த ஒரு நாடும் அணைகள் கட்டிக் கட்டுப்படுத்தக் கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் பல்வேறு நதிகள் ஓடுகின்றன, இந்த நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்புகள் மாநிலங்களாகப் பிரிந்து கிடக்கின்றன. இந்த மாநிலங்கள் உருவாக்கத்தில் மொழி, இனம் தொடர்பான பிரச்சனைகள் முக்கிய பங்கு வகித்தன. இப்போது பல்வேறு மொழி பேசுவோர் இடையே பகையும், சர்ச்சையும் இருந்து வருவதால் அது நதிநீர் பங்கீடு செய்து கொள்வதிலும் பாய்ந்து நிற்கிறது. கன்னட மொழி பேசும் கர்நாடக மாநிலத்தில் காவேரி ஆறு உற்பத்தியாகி அது தமிழகம் வழியாக பாய்ந்து வங்கக் கடலில் போய் கலக்கிறது.
இந்த காவேரி ஆற்று நீரை தமிழகத்திற்குக் கொடுப்பதில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1924 ஆம் ஆண்டு, ஐம்பது ஆண்டுகள் செல்லத்தக்க ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. அப்போது கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்று வந்தது. அன்றைய திமுக அரசு ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது. அது முதல் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் தில்லுமுல்லு செய்து வருகிறது.
1991 ஆம் ஆண்டு தான் காவிரி நதிநீர் பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காவரி ஆற்று நீருக்காக உண்ணாப்போராட்டம் நடத்தினார். அப்போது கர்நாடக முதல்வராக இருந்த பங்காரப்பாவும் தண்ணீர் தரமுடியாது என்று எதிர் உண்ணாப் போராட்டம் நடத்தினார். அப்போது தான் இந்த பிரச்சனை உச்சநீதி மன்றம் போனது. உச்சநீதிமன்ற ஆலோசனைபடி, இரு மாநிலங்களும் காவிரி நீரை பங்கீடு செய்வதற்காக மத்திய காவிரி நதிநீர் ஆணையம் உருவாக்கப்பட்டது. பிரதமர் அந்த ஆணயத்தின் தலைவராக இருந்துவருகிறார்.
22.11.1991 அன்று உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு போட்டது. அதில், இரண்டு மாநிலங்களுக்கிடையே ஓடும் நதியை ஒரு மாநிலத்திற்கு சொந்தமாகக் கருதக்கூடாது. அதுபோன்ற நதிக்கு எந்த மாநிலமும் தனி உரிமை கோரமுடியாது. மற்ற மாநிலத்திற்கு சம பங்கைத் தராமல் புறக்கணிக்க முடியாது என்று கூறியது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை கர்நாடக அரசு கொஞ்சமும் மதிப்பதாக இல்லை.
ஜூன், ஜூலை மாதங்களில் காவிரி ஆற்றின் நீரை திறந்து விடாததால் கார் சாகுபடி மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. 7 லட்சம் எக்கரில் விவசாயம் பாதித்தது. தமிழகத்தின் வாழ்வாதாரம் காவிரி. 45 சதவீதம் விவசாயத்தில் காவிரி நதிநீரின் பங்களிப்பு இருக்கிறது. தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கர் பரப்பில் செய்யப்படும் விவசாயம் முழுக்க முழுக்க மேட்டூர் அணை வழியாக வரும் நீரை மட்டும் நம்பியே இருக்கிறது. காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் நடுவர் மன்றம் 05.02.2003ல் இறுதி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை மத்திய அரசு அறிவிப்பாணையாக அரசு இதழில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெளியிடவில்லை. அதனால் ஏற்கெனவே இடப்பட்ட இடைக்கால தீர்ப்பை தான் பின்பற்ற வேண்டும். இடைக்கால உத்தரவு பின்பற்றப் படுவதை கண்காணிக்க காவிரி கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த குழு கூட வேண்டும். ஆனால் எதுவும் நடப்பதில்லை. காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தருவதில் மத்திய ஆளும் அரசுகள் எப்போதும் துரோகம் செய்தே வருகின்றன.
தற்போது இருக்கும் காங்கிரஸ் அரசும் கர்நாடகத்திற்கு ஆதரவாகவே இருந்து வருகிறது. காரணம், 1967க்குப் பின்னர் தமிழக மக்கள் காங்கிரஸுக்கு ஆளும் வாய்ப்பு அளிக்கவில்லை. அதற்கான வாய்ப்புகள் சமீபத்தில் இல்லை. ஆனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் வரும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக பின்னடைவைச் சந்திக்க இருப்பதால் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தனக்கு ஆளும் வாய்ப்புள்ள மாநில மக்களுக்கு சாதகமாக முடிவு செய்யும் மனநிலையை தான் மத்திய அரசும் கொண்டுள்ளது. ஒருவேளை காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக உத்தரவு போடும் பட்சத்தில், கர்நடக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சமும் மத்திய அரசுக்கு இருக்கிறது.
கர்நாடகத்தைப் பகைத்துக் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க உத்தரவிடுவதால் தமிழக அரசியலில் காங்கிரஸுக்கு தனி செல்வாக்கு கிட்டப் போவதில்லை என்பதே மத்திய அரசின் மௌனத்திற்கு காரணம்.
காவிரி நதிநீரின் கடைநிலை பாசன பகுதியில் தமிழகம் உள்ளது. காவிரி நதிநீரை தன்னுடைய அணைகளில் நிரம்பி வழியும் வரை நிரப்பிக் கொண்டு, காவிரி நதிநீரில் கர்நாடகம் ஏகபோக உரிமை கொண்டாடுகிறது. காவிரி நதிநீர் ஆணையத்தின் 7வது கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு தாமதித்து வந்தது. காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திற்கு தேதி கூட குறிக்க முடியவில்லையா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கடிந்து கொண்டது. மேலும் நதிநீர் ஆணையம் கூட்டப்படும் நாள் வரை, நாள் ஒன்றுக்கு 10,000 கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி கர்நாடகமும் தண்ணீர் திறந்துவிட்டது.
பின்னர், செப்டம்பர் 19ஆம் நாள் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், பாண்டிச்சேரி முதலமைச்சர்கள் அதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டா, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றார். கூட்டத்தில் சுமூக முடிவு எட்ட முடியவில்லை என்றால் பிரதமர் எடுக்கும் முடிவே இறுதியானது. இறுதியாக பிரதமர் மன்மோகன்சிங் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 25 தேதி வரை நாள் ஒன்றுக்கு 9000 கனஅடி தண்ணீரை திறந்துவிடும்படி கூறினார். ஒருதுளி தண்ணீர் கூட தரமுடியாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டா கூறிவிட்டார்.
தற்போது, மேட்டூர் அணையில் 40 டி.எம்.சி தண்ணீர் தான் கையிருப்பில் உள்ளது. சம்பா சாகுபடிக்கு 140 டி.எம்.சி. தண்ணீர் தேவை. பிப்ரவரி வரை ஓரளவேனும் தண்ணீர் இருந்தாலும் செப்டம்பர் 13-ல் மேட்டூர் அணையும், செப்டம்பர் 21ல் கல்லணையும் திறக்கப்பட்டது. மொத்தம் 13000 கனஅடி தண்ணீர்தான் வெளியேற்றப்படுகிறது. சிக்கனமாக பயன்படுத்தும்படி விவசாயிகளை அமைச்சர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மேட்டூர் அணைக்கு 133 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்பது காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் கட்டளை. வாரம் இவ்வளவு,மூன்று மாதம் இவ்வளவு என்றும் கணக்கு உண்டு. ஆனால் அதனை கர்நாடக அரசு செய்யவில்லை. மாறாக, டிசம்பர் மாத இறுதியில் தான், எவ்வளவு நீர் அளிக்கப்படவேண்டும் என்பதை கணக்கிட வேண்டும் என்று கர்நாடகம் கூறுகிறது. இது முற்றிலும் இரக்கமற்ற செயல். கர்நாடகம் காவிரி நீர் வரத்து முழுவதையும் தடுத்து வைத்ததால் பாசனத்திற்காக ஜூன் 12 அன்று திறந்துவிட வேண்டிய நீரை மேட்டூர் அணையில் இருந்து தமிழக அரசு இவ்வருடம் திறக்க முடியாமல் போனது.
கர்நாடக மாநிலத்தின் முக்கிய நீர்தேக்கங்கள் மொத்த கொள்ளளவில் 80 சதவிகித நீரை கொண்டுள்ளன. இடைக்கால ஆணையின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்யவில்லை. காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் எழுதிய கடிதங்களில் ஒன்றுக்கு மட்டும் தான் பிரதமர் பதில் அளித்திருக்கிறார்.
26.05.1991ல் காவிரி நதிநீர் ஆணையம் இட்ட இடைக்கால உத்தரவையோ அல்லது 05.02.2007ல் இட்ட இறுதி உத்தரவையோ கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. 24.08.2012 அன்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், டிசம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட தனக்கு அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இது காவிரி நதிநீர் ஆணையத்தை அவமதிக்கும் செயல். ஆனால் மத்திய அரசு இதனை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
இடர்கால பங்கீட்டு கோட்பாடு :
மழைகுறைவு மற்றும் நீர்வரத்து குறைவு ஆகிய இடர்காலங்களில் நீரை பகிர்ந்து கொள்ளும் கோட்பாட்டை மத்திய நதிநீர் ஆணையம் வகுத்துள்ளது. இந்த இடர்கால பங்கீட்டு கோட்பாட்டின்படி 15.09.2012 அன்று வரையிலும், கூடுதலாக 48.50 டி.எம்.சி. கனஅடி நீரை தமிழகம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பெறவில்லை. அதேபோல், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன.
1992 ஏப்ரல் 3ல் காவிரி நதிநீர் நடுவர் மன்றம் வெளியிட்ட தீர்ப்பில், எதிர்வரும் காலங்களில் உத்தரவிடப்பட்ட அளவு நீரைவிட குறைத்து விடப்பட்டு, அதனால் இக்கட்டான சூழ்நிலை வரும் எனில், காவிரி நதிநீர் ஆணையம், தனது இறுதி தீர்ப்பில் மீண்டும் வலியுறுத்திருப்பதை போன்று, இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கும் வகையில், எப்போதும் விகிதாச்சார அடிப்படையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.
2001 அக்டோபர் 10ல் காவிரி நதிநீர் அதிகார மன்றத்தின் 3வது கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில், இடர் காலத்தில், விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து கொள்வதற்கென எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நடுநிலையான நடைமுறை ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் முடிவெடுத்து, குறிப்பிட்ட கருத்துக்களை, காவிரி நதிநீர் அதிகார மன்றத்தின் பரிசீலனையோடு அனுப்புமாறு வடிநில மாநிலங்களுக்கு வேண்டுகோள் வைத்தது.
2002 ஆகஸ்டு 3 அன்று, காவிரி நதிநீர் அதிகார மன்றத்தின் 4வது கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில், மத்திய நீர் ஆணையமானது, இடர்பாடு காலத்தில், நதிநீரை விகிதாச்சார அடிப்படையில் பங்கிடுவதற்கென, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில், நடுநிலையான நடைமுறை ஒன்றை உருவாக்கியது. காவிரி நதிநீர் அதிகார மன்றத்தின் கீழ் செயலாற்றிவரும் காவிரி கண்காணிப்பு குழு கூட்டப்பட்டு 2002, செப்டம்பர் 15ஆம் தேதிக்குள், இடர்கால பங்கீட்டிற்கான ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டை இறுதி செய்ய வேண்டும் என்று அப்போதைய காவிரி நதிநீர் அதிகார மன்றத்தின் தலைவர் தெரிவித்தார்.
2002, செப்டம்பர் 3ல், உச்சநீதி மன்றம் வெளியிட்ட தீர்ப்பில், இக்கட்டான சூழ்நிலைகளில் காவிரி வடிநில மாநிலங்களுக்கிடையே, விகிதாச்சார அடிப்படையில் நதிநீர் பங்கீடு செய்வதில், மாநிலங்களுக்கிடையிலான சச்சரவை தீர்த்து வைக்கும்படி காவிரி நதிநீர் மன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய நீர் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட இடர்பங்கீட்டு கோட்பாட்டை காவிரி கண்காணிப்பு குழு 2003ஆம் ஆண்டிலேயே ஏற்றுக்கொண்டது. ஆனால் காவிரி நதிநீர் ஆணையம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இடர்பாடு ஏற்பட்ட ஆண்டில், கர்நாடக நீர் தேக்கங்களுக்கு வரும் நீரின் வரத்தைப் பொறுத்து, விகிதாச்சார அடிப்படையில் நீரை திறந்துவிடுவதற்கு இந்த கோட்பாடு வகை செய்கிறது. இந்தக் கோட்பாட்டை தமிழகம் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், கர்நாடகம் இதுவரை ஏற்றுக் கொள்ளைல்லை.
தற்போது இடர்பாடு சூழ்நிலை நிலவுவதால், கர்நாடகம் அதன் நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களில் பெறும் தண்ணீரை, பகிர்ந்து கொள்வதை உறுதி செய்வதற்கு ஏதுவாக, இந்த இடர்பாட்டு பங்கீட்டு கோட்பாட்டை ஏற்க வேண்டிய கட்டாயத் தேவை கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
சம்பா சாகுபடிக்கு 140 டி. எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. செப்டம்பர் 17ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது வெறும் 40 டி.எம்.சி. தண்ணீர் தான் இருந்தது. வினாடிக்கு 15000 கனஅடி திறக்கப்பட்டது. செப்டம்பர்28 மாலை முதல் வினாடிக்கு 13000 கனஅடியாக குறைந்த்து. செப்டம்பர் 21 அன்று முதல் கல்லணை திறக்கப்பட்டது. தண்ணீரை சிக்கனமாக செலவழிக்கும்படி அணைகளைத் திறந்து வைத்து அமைச்சர்கள் அறிவுரை கூறுகின்றனர். மழை இல்லாமல் வறட்சியும், தண்ணீர் இல்லாத பற்றாக்குறையும் சேர்ந்து காவிரி நதியை நம்பியுள்ள விளை நிலங்களும், விவசாயிகளும் கடும் துயருக்கு ஆளாகியுள்ளனர்.
நடுவர் மன்றக்குழு, காவிரி நதிநீர் ஆணையின் முடிவு, பிரதமர் வேண்டுகோள் எதையும் ஏற்க முடியாது, உச்சநீதி மன்றமே சொன்னாலும் கேட்க முடியாது என்று கர்நாடகம் சொல்லும் போது என்ன செய்வது? கர்நாடகத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியை அனைவரும் இழந்துவிட்டார்களா?
இதனிடையே, கர்நாடக சட்டசபையில் அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்று தீர்மானம் போட்டுள்ளனர். கர்நாடகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தினந்தோறும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் செப்டம்பர் 25ம் தேதி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. வடகிழக்கு பருவமழை துவங்கும் வரை தொடர்ந்து 24 நாட்களுக்கு, தினமும், இரண்டு டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் செப்டம்பரில் தொடங்கியுள்ள சம்பா சாகுபடி பாதிக்கப்படும். ஏற்கெனவே, தண்ணிர் பற்றாக்குறையால் ஜூனில் துவங்க வேண்டிய குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இம்மனு செப்டம்பர் 28 அன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார். அவர் கூறுகையில்,
அரசியலமைப்புச் சட்டத்தின் 355வது பிரிவின்படி, மாநிலங்களின் நலனை பாதுகாக்கும் பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்றும்படி, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். கர்நாடக அரசை இணங்க வைத்து, அங்கு ராணுவத்தை பாதுகாப்புக்காக நிறுத்தும்படி உத்தரவிடவேண்டும் என்றார் வைத்தியநாதன்.
பின்னர் தீர்ப்பு கூறிய நீதிபதி டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகூர், "பிரதமர் தலைமையில் செயல்படும் காவிரி நதிநீர் ஆணையம் மிக உயர்ந்த அமைப்பு. இதன் ஷரத்துக்குக் கட்டுப்பட மறுப்பது தங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. இது கண்டிக்கத் தக்கது. எனவே, காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்துக்கு, அக்டோபர் 15ம் தேதி வரை, தினமும் 9000 கனஅடி நீரை உடனடியாக திறந்துவிடவேண்டும், இந்த உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தால் அதற்கு ஏற்ற உத்தரவுகளை வழங்க நேரிடும். இதற்கு ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும்" என்றும் நீதிபதிகள் கூறினர்.
உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது தொடர்பாக, கர்நாடக அரசு செப்டம்பர் 29ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது. அமைச்சர்கள் பசவராஜ் பொம்மை (நீர்பாசனம்), கோவிந்த் கார்ஜோன் (கன்னடம் மற்றும் கலாச்சாரம்), சுரேஷ் குமார் (சட்டம்), யோகேஷ்வர் (வனம்), ஆர். அசோக் (துணை முதல்வர்), சீத்தாராமையா (எதிர் கட்சித்தலைவர்), ஜெயச்சந்திரா (எதிர்கட்சித் துணைத்தலைவர்), ரேவண்ணா (மதச்சார்பற்ற ஜனதா தளம், சட்டப் பேரவை கட்சித் தலைவர்), எஸ். ஆர். பாட்டீல் (சட்ட மேலவைத்தலைவர்) இவர்களுடன் கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆலோசித்து, உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது. நதிநீர் ஆணைய உத்தரவை நிறுத்தி வைக்கும்படி பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும். கர்நாடகம் வறட்சியில் இருப்பதை கண்டறிய இரு மாநில நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே, தமிழகத்துக்கு ஆகஸ்ட் 15 வரை தண்ணீர் விட காவிரி நதிநீர் ஆணைய உத்தரவை நிறைவேற்றச் சொன்ன உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநிலம் முழுவதும் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் செப்டம்பர் 29ல் போராட்டம் நட்த்தினர். காவிரி நதிநீர் படுகை மாவட்டங்களான மைசூர், மாண்டியா, ஹாஸன், ராம்நகரம், சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களின் தலைநகரங்களிலும், வட்ட தலைநகரங்களிலும் மற்றும் பெங்களூருவிலும் கன்னட விவசாயிகள், கன்னட ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெங்களூர், ஷிமோகா, குல்பர்கா, பெல்காம், தாவணசெரே, சித்தரதுர்கா, மைசூர் உள்ளிட்ட நகரங்களில் கர்நாடக ரக்ஷ்ண வேதிகா அமைப்பினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்தியா விவசாயத்தை மூலதனமாக கொண்ட நாடு. ஆனால், விவசாயத்திற்கு மூலதனமான நதிநீரை பங்கீடு செய்வதிலும், பெற்றுக் கொள்வதிலும் பெரிய அளவில் சிக்கல்கள் இருக்கிறது. விவசாயிகள் கடனில் மூழ்கி தற்கொலையும் செய்து கொள்ளும் நிலையில் மத்திய அரசும், மாநில அரசுகளும், நீதிமன்றங்களும் தாமதமாக முடிவுகள் அறிவிப்பதும், ஒரு மாநில அரசை நிர்பந்திக்க முடியாமல் மத்திய அரசு நடித்துக் கொண்டிருப்பதும் இந்திய கூட்டாட்சித் தத்துவத்துக்கே வேட்டு வைப்பதாக அமையும்.
யோக்கிய சிகாமனி எடியூரப்பா சொல்கிறார் :
கர்நாடகத்தில் தமிழர்களும், கன்னடர்களும் அண்ணன் தம்பியாய் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்தால் அந்த உறவு சீர்கெடும் என்று கூறியிருக்கிறார். அதாவது, தண்ணீர் வேண்டாம் என்றால் உறவுக்கு பங்கம் இல்லை. தண்ணீர் கேட்டால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதை தான் அவ்வளவு நாகரீகமாக எடியூரப்பா சொல்கிறார்.
கர்நாடகாவில் அதிகரிக்கும் பாசன பகுதி
1991, ஜூன் 25 ஆம் நாள், காவிரி நதிநீர் மன்றம் வெளியிட்ட இடைக்கால உத்தரவில், கர்நாடக மாநிலம் காவிரி நீர்பாசன பகுதிகளை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. கர்நாடக அரசு ஆண்டுதோறும் பாசனம் செய்யும் பகுதி குறித்த விபரங்களை காவிரி கண்காணிப்பு குழுவிடம் அளிக்க வேண்டும். ஆனால் அளிப்பதில்லை.
நெல் கொள்முதல் ஆதாரவிலை :
வரும் அக்டோபர் முதல் தேதி முதல் 2013 செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான கார்ப்பருவத்துக்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
இதன்படி, சாதாரண நெல்லுக்கான விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,250ம், சன்னரக நெல்லுக்கு ரூ. 1,280ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சாதாரண நெல்லுக்கு கூடுதலாக 50 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு கூடுதலாக ரூபாய் 70ம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் விவசாயிகளுக்கு முறையே ரூ. 1300ம், ரூ. 1350ம் கூடுதலாக கிடைக்கும். அதேபோல் அதிக அளவில் நெல் விளையும் காவிரி பாசன பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுமதி வழங்குமாறும், பிற பாசன பகுதிகளுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் திறக்க அனுமதி வழங்குமாறும் தமிழக முதல்வர் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.



.jpg)
தமிழகதில் வருடாவருடம் பெய்யும் மழையே போதும் நமக்கு மட்டும் சரியான சேமிக்கும் வசதி இருந்தால் இதனை இந்த அரசு செய்ய வேண்டும்...ஆற்றை பிளாட் போடுவதை தடுத்து நிறுத்தவேண்டும்....தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரையும் கடலில் கலப்பதை அணை கட்டி தடுக்கவேண்டும் .....
கர்நாடகாவில் கனமழை பெய்யும் காலத்தில், 100 TMC என்ன, ஒரு கிளாஸ் தண்ணீர் கூட எங்களுக்கு (தமிழகத்திற்கு) வேண்டாம், திறந்து விடாதீர்கள் என்று நாம் சொன்னால்,
அடுத்தவருடம் கர்நாடகாவில் அந்த தண்ணீரை குடிக்க யாரும்இருக்கமாட்டார்கள் ...வெள்ளம் வந்து அழித்து விடும், வெள்ளம் வரும் காலத்தில் மட்டும் Supreme Court டும் , பிரதமரும் சொல்லாமல் தண்ணீரை திறபார்கலாம்... இவர்கள்?????
உலகத்தில் அடுத்த போர் தண்ணீரால் வரும் என்கிறார்கள் .......
நிட்சயமாஹ........
குற்றால அருவி மட்டும் சவுதியில் இருந்து இருந்தால்...அதே அருவி தண்ணீரை பில்ட்டர் பண்ணி மீண்டும் குற்றால மலைக்கே திருப்பி விட்டு ஒவ்வொரு நாளும் சீசன் ஆக்கி இருப்பார்கள்....பொங்குமா கடலை ரோப் கார் மூலம் பார்க்க வைத்து இருப்பார்கள்.
|
No comments:
Post a Comment