Total Pageviews

Friday, 7 June 2013

கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள்

கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள் 
மதுரை மாவட்டத்தில் சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கை சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.தங்களது நிலங்களைக் கையகப்படுத்த விவசாயிகள் தெரிவித்த எதிர்ப்புக்கு அரசு செவி மடுத்ததா? நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சி கைவிடப்பட்டு விட்டதா? புதிய தலைமுறையின் புலனாய்வில் கண்டறியப்பட்ட உண்மைகள் பின்வருமாறு:-
கோடை வெயிலிலும், பசுமை மாறாமல் படர்ந்து விரிந்திருக்கும் விவசாய நிலங்கள் சிப்காட் நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளன. மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராமங்களிலிருந்து ஆயிரத்து 478 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். இதற்கு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களான விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பை வலுவாக பதிவு செய்த வந்த நிலையிலும், அவற்றின் விலை பற்றிய நிர்ணயக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பது அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
எதிர்ப்புகள் கடுமையாக எழுந்தபோதிலும், விவசாயிகளின் நிலங்கள், அவர்களுக்கு தெரியாமலேயே சிப்காட் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது வில்லங்கச் சான்றிதழ்கள் மூலம் அம்பலமானது. முறையான அறிவிப்பும் இன்றி, நிவாரணத்தொகையும் வழங்காமல், நிலத்தைப் பெயர் மாற்றம் செய்தது தவறு என்கிறார்கள் சட்ட வல்லுனர்களும் சமூக ஆர்வலர்களும்.
நிலம் கையகப்படுத்தும் விவகாரத்திற்கு மாவட்ட ஆட்சியர்தான் பொறுப்பு என்கிறார் சிப்காட் நிர்வாக இயக்குனர் சுவரண்சிங். நிலம் கையகப்படுத்துவதில் குளறுபடி எதுவும் இல்லை எனக் கூறுகிறார் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா.
நில உரிமை அரசின் பெயரிலும், சிப்காட் பெயரிலும் மாற்றியிருப்பது தற்காலிகமான செயல் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்ட பிறகே நிலங்களின் உரிமம் மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment